திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 ஜனவரி 2017 (10:52 IST)

’அத்தனை இளைஞர்களுக்கும் தலை வணங்குகிறேன்’ - விஜய் நெகிழ்ச்சி வீடியோ

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்திருக்கின்ற அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.


 

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சேரன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் டி.ராஜேந்தர், இயக்குநர் கவுதமன், நடிகர் கருணாஸ், நடிகர் சவுந்தர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ஆதரவு தெரிவித்து, பேசிய வீடியோ பதிவு ஒன்றினை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளார்.

அதில் விஜய், ”எல்லோருக்கு வணக்கம். நான் உங்கள் விஜய் பேசுகிறேன். உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களுடைய கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாப்பதற்காகத் தான், பறிப்பதற்கு அல்ல. தமிழனுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு.

எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்திருக்கின்ற அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்தால் நான் சந்தோஷப்படுவேன். இத்தனைக்கும் காரணமான அமைப்பை (பீட்டா) வெளியே அனுப்பி விட்டால் தமிழ்நாடே சந்தோஷப்படும்” என்று கூறியுள்ளார்.

வீடியோ கீழே: