வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (10:57 IST)

நடிகர் விஜய் கட்சியில் 15 மணி நேரத்துக்குள் இவ்வளவு உறுப்பினர் சேர்க்கையா? – நிர்வாகிகள் அளித்த அடடே தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய நிலையில் இதுவரை உறுப்பினராக சேர்ந்தவர்கள் குறித்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.



நாடு முழுவதும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை திட்டமிட்டு அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து வரப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை திட்டமிட்டு இப்போதே அதிரடியாக செயல்பட்டு வருகிறார் நடிகர் விஜய்.

நெடுங்காலமாகவே அரசியல் எண்ட்ரிக்கு அஸ்திவாரம் போட்டு நகர்ந்து வந்த விஜய் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்தல், உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு நேற்று முதல் செல்போன் செயலியில் உறுப்பினர் முன் பதிவு தொடங்கியது.


இதில் முதல் உறுப்பினராக நடிகர் விஜய்யே இணைந்தார். அதை தொடர்ந்து அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் தொடர்ந்து உறுப்பினராக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

நேற்று தொடங்கிய உறுப்பினர் சேர்க்கையில் 15 மணி நேரங்களுக்குள் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2 கோடி உறுப்பினர்களாவது இணைக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை ஒப்பிட்டால் இது திட்டமிட்ட எண்ணிக்கையில் 10 சதவீதம்தான். எனினும் ஒரு நாள் முடிவதற்கு இந்த எண்ணிக்கையை எட்டிய நிலையில் சில மாதங்களுக்குள் 2 கோடி எண்ணிக்கையை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.

Edit by Prasanth.K