காபி ஷாப் கூட்டிகிட்டு போயா போலீஸ் சொல்லிக் கொடுப்பாங்க - நடிகர் கருணாகரன்
போலீசாரிடம் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக எழுந்த மன உளைச்சலில் தரமணி பகுதியில் கார் டிரைவர் தீக்குளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் கருணாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணி அருகே உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்னல் அருகே சீட் பெல்ட் அணியாமல் சென்ற கார் ஓட்டுனரை தடுத்த போலீசார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து அவமானத்திற்கு உள்ளாகிய டிரைவர் அங்கேயே தீக்குளித்தார். பின்னர் உடனடியாக டிரைவர் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டிரைவரின் தற்கொலை முயற்சிக்கு போலீஸார்தான் காரணம் என கூறிய பொதுமக்கள், அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நேற்று சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளித்த டிரைவருக்கு 58% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கருணாகரன் “போலீசார் நம்மை காபி ஷாப்பிற்கு அழைத்து சென்று சாலை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கிவிட்டு, கூலாக பை சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் நாம் தீக்குளிப்போம். அந்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், சாமி, சிங்கம், வேட்டையாடு விளையாடு போலீசை நாம் ரசிப்போம்” என சற்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.