முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் - கல்லூரிகள் மீது நடவடிக்கை..! அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை..!!
முறைகேடாக பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மை தான் என்று தெரிவித்தார். 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,500 பேர் பணியாற்றுகின்றனர் என்றும் மீதம் உள்ள 2 ஆயிரம் இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் கண்டறியப்பட்ட உள்ளது என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.