அத்திவரதர் பக்தர்களை குளிர்விப்பதற்கு ஒரு முயற்சி.. ஆவின் நிறுவனம் முடிவு
ஆவின் நிறுவனம், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை குளிர்விக்க ஒரு முயற்சியை மேற்கொள்ள உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சித் தரும் அத்திவரதர், ஆகஸ்டு 17 ஆம் தேதி மீண்டும் குளத்தில் செல்கிறார்.
இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 3 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. அதுவும் பகல் நேரங்களில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைகின்றனர். அவ்வாறு வரிசையில் நின்று சோர்வுறும் பக்தர்களுக்கு ஆவின் நிறுவனம் மோர் வழங்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. அதாவது தினந்தோறும் 2 ஆயிரம் லிட்டர் மோரை, 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வினியோகிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்களின் வரவேற்பை பொறுத்து மோரின் அளவை அதிகரிக்கவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, பிளாஸ்டிக் கப்பில் மோர் வழங்கபடமாட்டாது எனவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. முக்கியமாக அந்த மோரில், இஞ்சி, பச்சை மிளகாய், நீர் ஆகியவை சோதனைக்கு பிறகே கலந்து வினியோகிக்கப்படும் எனவும் ஆவின் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.