1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:20 IST)

ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடிய பக்தர் கூட்டம்

ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடிய பக்தர் கூட்டம்

ஆடி மாதம் 18–ந் தேதி இந்துக்கள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.


 
 
மேட்டூர் அணை, பவானி, திருவையாறு,  மற்றும் திருவாரூர், நாகை மாவட்டம் உள்பட காவிரி டெல்டா பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு விழாவிற்காக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கும்பகோணம் வரை சென்றது. இதனால் மற்ற பகுதியில் மக்கள் ஆற்றில் பம்பு செட்டுகள் அமைத்தும் கிணறு தோண்டியும் வழிபாடு நடத்தினர்.
 
அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வணங்கி புதுப் புனலில் நீராடி பூஜித்தனர். ஆடிப்பெருக்கு விழாவில் ஆறு படித்துறையில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புது மஞ்சள் கயிறு கழுத்தில் அணிந்து கொண்டனர்.
 
புது மண தம்பதிகள் திருமணத்தின் போது அணிவிக்கப்பட்ட மாலைகளை கொண்டு வந்து ஆற்றில் விட்டனர். தாலி கயிற்றை மாற்றி கொண்டனர். பிறகு சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். 
 
சிறுவர்கள் மரத்தினால் செய்யப்பட்ட சப்பரங்களை விட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஆற்றங்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 
இன்று ஆடிப்பெருக்கு விழாவோடு ஆடி அமாவாசையும் சேர்ந்து வந்ததால் திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் பல ஆயிரக்கனக்கான பொது மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
 
ஆடிப்பெருக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை போல பல பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.