சூட்கேசில் 60 கிலோ கஞ்சா கடத்திய டிப்-டாப் பெண்மணி
சென்னையில் டிப்-டாப் உடையணிந்த பெண் ஒருவர் சூட்கேஸில் 60 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
சென்னை போரூர் அருகே வளசரவாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் டிப்-டாப்பாக உடை அணிந்துகொண்டு சூட்கேசுடன் நின்றுகொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அந்த பெண்ணிடம் இருந்து சூட்கேசை பறிக்க முயன்றனர்.
அந்த பெண் திருடன் திருடன் என கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அவர்கள், அந்த பெண்ணின் முகத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால் அந்த பெண் சிகிச்சை எல்லாம் வேண்டாம் நான் செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.
விடாத போலீஸார் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸார் அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சூட்கேசில் 60 கிலோ கஞ்சா இருந்தது.
அந்த திருடர்கள் அந்த பெண்ணிற்கு தெரிந்தவர்கள் தான் என்றும் அவரிடமிருந்த கஞ்சாவை பறிக்க முயற்சிக்கவே வழிப்பறி சம்பவம் நடைபெற்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இளம்பெண் யாரிடமிருந்து கஞ்சாவை வாங்கிவந்தார், அவருக்கு பின்னால் உள்ள கூட்டம் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.