1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (08:35 IST)

தொடரும் அபிராமிகள்.. கணவன் மீது சந்தேகம்: இரண்டரை வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற தாய்

கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களுக்கு இரண்டரை வயது மகள் இருந்தார்.
 
இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த வேளையில், சந்தேகம் எனும் கொடிய நோய் இவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தியது. கணவன் மீது சந்தேகப்பட்ட தமிழ் இசக்கி அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் நாகராஜ் மனைவியுடன் பேசுவதில்லை எனத் தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த தமிழ் இசக்கி குழந்தையை கொன்று விட்டு, தாமும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
 
இதனையடுத்து நாகராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில், தமிழ் இசக்கி அந்த பிஞ்சுக் குழந்தையை தண்ணீர்ல் மூழ்கடித்து கொலை செய்தார். பின் அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முற்பட்டபோது நாகராஜ் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் அதிர்ந்துபோன தமிழ் இசக்கி யாரோ குழந்தையை கொன்றுவிட்டதாக நாடகமாடினார்.
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் தமிழ் இசக்கியிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தவே தமிழ் இசக்கி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த போது, கணவர் திடீரென்று வீட்டிற்கு வந்ததால் அவரிடமிருந்து தப்பிக்க பொய் சொன்னதாகவும் தமிழ் இசக்கி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் தமிழ் இசக்கியை கைது செய்தனர்.
 
பெற்றோரின் இந்த கால்புணர்ச்சிக்கு பிஞ்சுக் குழந்தைகள் என்ன பாவம் செய்தது? ஏன் இந்த அவலங்கள் தொடர்கதையாகிறது? இதனை தடுக்க வழி இல்லையா? என பொதுமக்கள் பலர் குமுறுகின்றனர்.