திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (10:06 IST)

யூட்யூப் வீடியோ பார்த்து பிரசவம் - பரிதாபமாய் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண்

யூட்யூப் வீடியோ பார்த்து  கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கிருத்திகா. கார்த்திக் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் கிருத்திகா கர்ப்பமுற்றார். தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வரப்போகிறது என சந்தோஷத்தில் திளைத்தனர் கார்த்திக் - கிருத்திகா குடும்பத்தினர். அந்த நேரத்தில் எமனாய் வந்தார் கார்த்திக்கின் நண்பர் பிரவீன்.
 
பிரவீன் கார்த்திக்கிடம் உன் மனைவி கர்ப்பமாக உள்ளார். எல்லோரும் செய்வதைப் போல உன் மனைவியை செக்கப்பிற்காக மருத்துவமனை எல்லாம் அழைத்துச் செல்லாதே. காலம் மாறி விட்டது. அந்த காலத்தில் எல்லாம் பிரசவ காலத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார்களா? அல்லது மருத்துவமனை தான் சென்றார்களா? ஆகவே யூட்யூபை பார்த்து நாமே கிருத்திகாவிற்கு பிரசவம் பார்க்கலாம் என்று கூறி கார்த்திக்கின் மனதை மாற்றியுள்ளார் பிரவீன்.
 
கார்த்திக்கும் நடந்தவற்றை மனைவியிடம் கூறியுள்ளார், முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த கிருத்திகா பின் சரி என்று கூறியிருக்கிறார். இருவரது உறவினர்கள் எவ்வளவோ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
 
இந்நிலையில் நேற்று கிருத்திகா பிரசவ வலியால் துடித்திருக்கிறார். கார்த்திக் பதறிப் போய் நண்பன் பிரவீனை அழைத்துள்ளார். எமனாய் வந்த பிரவீன்  யூட்யூபில் பிரசவம் செய்யும் வீடியோவை பார்த்தபடி கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை கொடூரமாக வெளியே இழுத்ததில் கிருத்திகா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தை படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.
 
யூட்யூபை பார்த்து செய்வதற்கு இது ஒன்றும் சமையல் அல்ல, முயற்சி செய்கிறேன் என்ற பெயரில் பிரவீனின் அதிமேதாவி செயலால் அநியாயமாய் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோகிவிட்டது.
 
கிருத்திகாவின் உடலைப் பார்த்து அவரது கணவரும் உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.