நடிகைகள் பற்றி இழிவாக பேசிய ஏ.வி. ராஜு..! ஒரு கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு.!!
அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜு, கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலை பேசி ஆட்சிக்கு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியதோடு திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
கூவத்தூருக்கு பல நடிகைகளை அழைத்து வந்ததாகவும், அதற்கு நடிகர் கருணாஸ் தான் ஏற்பாடு செய்ததாகவும் ஏ.வி. ராஜு கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தியும், தன் மீது மோசடி புகார் கூறியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ராஜூவின் பேச்சால் அதிமுகவுக்கு இருந்த பெண்கள் ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.