துணைவேந்தரைக் காப்பாற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய தடங்களை அழிக்க முயற்சி
கோவை பாரதியார் பல்கழைக்கழக லஞ்சப் புகாரில் சிக்கிய துணைவேந்தரை காப்பாற்ற பேராசிரியர்கள் சில ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக புகார் எழுந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது, சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். துணைவேந்தர் கணபதி பொறுப்பேற்ற பின், துப்புரவு பணி முதல் பேராசிரியர் பணியிடம் வரை, 250க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ரூ.80 கோடி வரை லஞ்சம் பணம் கை மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் விடுதியில், பேராசிரியர் ஒருவர் துணைவேந்தர் கணபதி பதவியேற்றபின், அவர் நியமித்த பணியிடங்கள் தொடர்பான ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆவணங்கள் முக்கிய தடயங்களாக இருக்கலாம் எனக் கருதி, லஞ்ச ஒழிப்பு துறையினர் குறிப்பிட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.