குவைத்தில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் லக்கேஜ் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுவாக விமானங்களில் பயணிகள் தங்கள் கைப்பைகளை தவிர்த்து பிற லக்கேஜுகளை தனியாக அளிப்பதும், அவற்றை விமான நிலையங்களில் கன்வேயர் பெல்ட் பகுதியில் சேகரித்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 248 பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை சேகரிக்க கன்வேயர் பெல்ட் சென்றபோது 12 பேருடைய லக்கேஜ் மட்டுமே அதில் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எடையை குறைக்க உடமைகள் அனைத்தும் குவைத் விமான நிலையத்திலேயே விடப்பட்டுள்ளதாகவும், இரண்டொரு நாட்களில் வேறு விமானத்தின் மூலம் அவை கொண்டு வரப்பட்டு பயணிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கொடுக்கப்படும் எனவும் சொல்லி அதிகாரிகள் சமாதானம் செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Edit by Prasanth.K