2 வதும் பெண் குழந்தை.. ஆத்திரத்தில் பிஞ்சுக் குழந்தையை கொன்ற தாய்
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால், பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் அதனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் என வனிதா நினைத்திருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்தது, வனிதாவை ஆத்திரமடையச் செய்தது. கோபத்தில் இருந்த வனிதா, பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் அதனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின் ஒன்றும் தெரியாததுபோல் காவல்துறையினரிடன் சென்று குழந்தையை காணவில்லை என நாடகமாடியுள்ளார். வனிதாவின் மீது சந்தேகித்த போலீஸார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் வனிதா குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். பின் போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் வனிதாவை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.