பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீக்கு வந்த கொரியர் தபால்: பார்த்தவுடன் அதிர்ச்சியாகிய பெற்றோர்
அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்து 20 நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு கொரியர் தபால் ஒன்று வந்துள்ளது
பிடெக் படிப்பு முடித்திருந்த சுபஸ்ரீ கனடாவில் மேல் படிப்பு படிக்க கடந்த 10 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வு எழுதியிருந்தார். இந்த தேர்வின் முடிவுதான் அந்த கொரியர் தபாலில் இருந்தது. அந்த தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கனடா செல்ல தயாராகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை பார்த்ததும் அவரது பெற்றோர் கனடாவில் ஸ்காலர்ஷிப்புடன் மேற்படிப்பு படிக்க தொடர்வதற்கான தங்கள் மகளின் கனவு நனவாகியும் அதனை பார்க்க அவர் உயிரோடு இல்லையே என்று கூறி கண்கலங்கிய காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது. ஒரு இளம்பெண்ணின் மேற்படிப்பு கனவு ஒரு பேனரால் கலைந்ததாக அந்த பகுதியில் உள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆடம்பரத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் வைத்த ஒரு பேனரால் ஒரு பெண்ணின் வாழ்நாள் கனவு கலைந்தது மட்டுமின்றி அவரது பெற்றோரையும் மீளாத்துயரில் கொண்டு போய் விட்டுள்ளது. சுபஸ்ரீக்கு நடந்தது போல் இன்னொருவருக்கு நடக்காமல் பார்த்து கொள்வது அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்