வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (21:12 IST)

தரமற்ற முறையில் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர்

karur
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில்  தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி செல்லும் சாலையை புதுபிக்க ஒப்பந்ததாரர் புதிய சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் 4 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்த தார் சாலை அமைத்தால் பொதுமக்கள் தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கபட்டி வழியாக வீரப்பூர் செல்லும் பிரதான சாலையாக இருக்கும்.  தார்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் கடந்த 2 மாதம் நடைபெற்று வந்தது.
 
அனைத்து பணிகளும் முடிந்து நேற்று இந்த தார் சாலை பணி நிறைவு பெற்றுள்ளது.
 
ஆனால், முறையாக தார்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார் சாலையை அகற்றாமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தரமற்ற சாலை போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கைகளால் உருட்டினால் அடை போல சுருளும் அவலநிலை உள்ளது.
 
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
மேலும், தரமற்ற முறையில் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.