வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (16:07 IST)

தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனை வெட்டிக் கொன்ற கல்லூரி மாணவன்! – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

crime
இரண்டு ஆண்டுகளுக்கு முன்  தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 
கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் ப்ரணவ், சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை தனது நண்பர்களுடன் இணைந்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் பெற, ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது  இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்  ப்ரனவின் கண்ணில் மிளகாய் பொடி தூவியும், அரிவாளால் பின்புறத்தில் உள்ள கழுத்து மற்றும் வலது கை பகுதியில்   வெட்டிவிட்டு இருசக்கரவாகனத்தில் தப்பியுள்ளார்.

இதனைப்பார்த்து அருகிலிருந்தவர்கள் அஞ்சி நடுங்க, சம்பவ இடத்தில் ப்ரணவ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்..

இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிய ப்ரணவ்-ஐ மாணவனை மீட்டு அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ப்ரணவ்-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்..

இதனிடையே பள்ளி மாணவனை கொலை செய்ததாக சூலூர் காவல் நிலையத்தில் வாலிபர் சரண்டைந்தார். போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது மகன் பேரரசு என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் பிரணவ் பேரரசு மற்றும் பேரரசுவின் தங்கை ஆகியோர் ஒண்டிப்புதூரில் உள்ள பள்ளியில் படித்து வந்ததும் கடந்த 2022 ஆம் ஆண்டு பேரரசுவின் தங்கையுடன் படித்த பிரணவ் உட்பட நான்கு மாணவர்கள் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேரரசுவின் தங்கை தனது சகோதரனிடம் கூறியதை தொடர்ந்து பேரரசு நால்வரையும் தட்டி கேட்டுள்ளார். அப்போது நால்வரும் இணைந்து பேரரசுவை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து தனது தங்கையை கிண்டல் செய்து தன்னை தாக்கிய நால்வரையும் பழிக்குப் பழி வாங்க நினைத்த பேரரசு கடந்த ஆண்டு பிரணவின் நண்பரான ஜெகதீஷ் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஐபிசி 307 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரணவ்-ஐ பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சக நண்பர்களுடன் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் நின்று பிரணவின் கண்ணில் மீது மிளகாய் பொடியை வீசிய பேரரசு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரணவ்-ன் பின்புற கழுத்து மற்றும் வலது கை மற்றும் அக்குள் ஆகிய பகுதியில் வெட்டியுள்ளார் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து பேரரசுவை கைது செய்த சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவையில் தனது தங்கையை கிண்டல் செய்ததற்கு பழிவாங்க இரண்டு ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவனை கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.