1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (08:51 IST)

ஆரம்பித்தது முதல் பிரச்சனை.. தமிழக வெற்றிக் கழக 20 நிர்வாகிகள் மீது வழக்கு..!

தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக ஒரு பிரபலம் அரசியல் கட்சி தொடங்கினால் அவருக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து குடைச்சல் கொடுக்கப்படும் என்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் சவால்களை விஜயகாந்த் புதிய கட்சி ஆரம்பித்தபோது எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் கண்டிப்பாக சில மாதங்களில் பிரச்சனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 20 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வருவாய் துறை மற்றும் காவல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடியேற்றப்பட்டதால் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்பட 20 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva