வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (11:30 IST)

செயற்கோள் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள்: விண்ணில் செலுத்தப்படும் என தகவல்

கரூரில் அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கை கோள் ஒன்றை தயாரித்துள்ளனர்.

”ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற அமைப்பு, விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் “ விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்” என்ற போட்டியை அறிவித்திருந்தது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 அம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலின் படி 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைகோள் ஒன்றை தயாரித்துள்ளனர்.

இந்த செயற்கைகோளின் செயல்பாடுகள், நோக்கம், ஆகியவை குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ பதிவை “ஸ்பேஸ் கிடஸ் இந்தியா” அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர். அந்த அமைப்பின் சார்பில் தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளின் செயற்கைகோள்களில் வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்களின் செயற்கைகோளும் ஒன்றாகும்.

இந்நிலையில் வருகிற 11ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100 ஆவது பிறந்த நாளில் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த மாணவர்கள் 5 பேரும் ஆசிரியர் தனபாலுடன் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியிலுள்ள “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” அமைப்பின் வளாகத்திற்கு செல்லவுளனர். அங்கு சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் செயற்கைகோள் ஹிலீயம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் இணைத்து விண்ணில் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

விண்வெளியில் குறிப்பிட்ட உயரம் சென்றவுடன் பலூன் வெடித்து செயற்கைகோள் தனியாக பிரிந்து வானிலை நிலைமை குறித்த தகவல்களை சேகரித்து, பாராசூட் அமைப்பின் உதவியால் பூமிக்கு வரும். அவ்வாறு அது அனுப்பும் படங்கள், சிக்னல்களை தரையிலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறுவது குறித்து இம்மாணவர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.

இது குறித்து , இந்த செயற்கைகோளை தயாரித்த மாணவர் குழுவின் தலைவர் நவீன்குமார் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில், இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை கடுமையக உள்ளது. நிலத்தடி நீர் குறைந்து போனதே இதற்கு காரணம். இதற்கு முக்கிய காரணமான சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் விதமாக அதன் வேர், தண்டு, பூ, காய், இலை, பட்டை, தண்டு ஆகியவற்றை சாறாக பிழிந்து பின் உலர வைத்து படிகமாக்கி இந்த செயற்கைகோளில் வைத்து அனுப்ப முடிவு செய்தோம் என கூறினார்.

மேலும் விண்வெளிக்கு சென்று பின் கீழே வரும்போது வளிமண்டல அழுத்தம், சூரிய கதிர்வீச்சின் தாக்கம், ஈரப்பதம் உள்ளிட்டவை இந்த படிகத்தில் உண்டாக்கும் விளைவுகளினால் அந்த ஜீன்கள், டி.என்.ஏ.வில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான வழிவகைகளை கண்டறிய உள்ளோம்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.