1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (17:15 IST)

அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசு அவசர சட்டம்

கொரோனா உள்பட தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
இதன்படி, இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி, அபராதம் உள்பட ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தமிழ்நாடு அரசினால்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கண்ணியமான முறையில்‌ அடக்கம்‌ / தகனம்‌ செய்வதைத்‌ தடுக்கும்‌ செயலையும்‌, தடுக்க முயற்சிப்பதையும்‌
தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும்‌ நோக்கில்‌ மாண்புமிகு அம்மாவின்‌ அரசு அவசரச்‌ சட்டம்‌ ஒன்றை பிறப்பித்துள்ளது.
 
இந்த அவசரச்‌ சட்டத்தின்படி, அரசால்‌ அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின்‌ உடலை கண்ணியமான முறையில்‌ அடக்கம்‌ / தகனம்‌ செய்வதைத்‌ தடுப்பதும்‌, தடுக்க முயற்சிப்பதும்‌ குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது தமிழ்நாடு பொது சுகாதாரச்‌ சட்டம்‌, 1939, பிரிவு-74ன்படி அபராதம்‌ உட்பட குறைந்தபட்சமாக ஒராண்டு சிறைத்‌ தண்டனையும்‌ அதிகபட்சமாக மூன்றாண்டுகள்‌ வரை சிறை தண்டனையும்‌ விதிக்கப்படும்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது