வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (08:40 IST)

கலெக்டரிடம் மனு கொடுத்த 3 வயது சிறுவன்: சிவகங்கையில் பரபரப்பு

பொதுவாக பெரியவர்கள் தான் கலெக்டரிடம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை விடுத்து கலெக்டரிடம் மனு கொடுப்பதுண்டு. எப்போதாவது மாணவ, மாணவிகளும் கலெக்டரிடம் மனு கொடுப்பதுண்டு. ஆனால் சிவகங்கை அருகே 3 வயது சிறுவன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிவகங்கை அருகே உள்ள மாடக்கோட்டை என்ற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த அங்கன்வாடி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அதன் பலனை அனுபவிக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த 3 வயது சிறுவன் குமரகுரு என்பவன் அங்கன்வாடியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் மனு அளித்தார். தன் பெற்றோருடன் வந்த சிறுவன் தன்னை போன்ற சிறுவர், சிறுமியர் பயன்பெற விரைவில் அங்கன்வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.