கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை..!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று (02.03.2024) சோதனையை தொடங்கினர்.
சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.
சென்னை அண்ணாநகர் ஏகே பிளாக் 10வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்டு ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் அண்ணாநகர், ஷெனாய் நகர், எழும்பூர் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலும் 2-வது நாளாக வருமான சோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற வரும் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.