1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (18:27 IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் 203 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2526ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 203 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 176 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1082ஆகவும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 பேர்களும், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் , மதுரை, நாகை, தஞ்சை, விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது