திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (13:34 IST)

மதமாற்றம்-ங்கர வார்த்தையே இல்ல... மாணவியின் திடுக்கிடும் மரண வாக்குமூலம்!

அரியலூர் மாணவியின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா பூதலூரில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் விடுதியில் உள்ள லாவண்யா உடல்நலமின்றி இருப்பதாக விடுதி நிர்வாகம் முருகானந்தத்திற்கு போன் செய்து வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
 
முருகானந்தம் லாவண்யாவை சொந்த ஊருக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் விஷம் அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முருகானந்தம் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.
 
இந்நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதை தொடர்ந்து மாணவியை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் முயற்சித்ததுதான் மாணவி தற்கொலைக்கு காரணம் என கூறி பாஜகவினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திலும், அவரது பெற்றோர் அளித்த முதல் புகாரிலும் மதமாற்றம் குறித்து தெரிவிக்கவில்லை என விளக்கம் அளித்தார். 
 
இதனிடையே மாணவி லாவண்யா மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், என்னை சகாயமேரி ஹாஸ்டல் பில்களை கணக்கு எழுத வேண்டும் என்று மீண்டும் டார்ச்சர் செய்தார்.  விடுமுறைகளுக்கு வீட்டிற்கு அனுப்பமாட்டார். என்னை திட்டிக்கொண்டே இருப்பார். இதனால் தான் நான் மருந்து சாப்பிட்டு விட்டேன். என்னுடைய இந்த நிலைமைக்கு அவர்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். வேறு ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.
 
மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் முயற்சித்ததுதான் மாணவி தற்கொலை செய்துக்கொண்டார் என கூறப்பட்ட நிலையில் மாணவியின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாய மேரியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.