வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (10:02 IST)

10 ஆம் வகுப்பு தேர்வுக்கு வந்தது ஒரு முடிவு: அட்டவணை விவரம் இதோ...!!

ஒரு மாதத்திற்கு மேலாக தள்ளி போய் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். 
 
இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதிக்குப் பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. 
 
இதற்கு தற்போது பதிலும் கிடைத்துள்ளது, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
மேலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.