1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (09:06 IST)

திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகளாக நடித்து ரூ.1.69 கோடி அபேஸ்! – ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்!

திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என சொல்லி தொழிலதிபரிடம் ரூ.1.69 கோடியை அடித்து சென்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.



சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவது வழக்கமான செய்தியாக ஆகியுள்ளது. இதை பயன்படுத்தி திருப்பூர் தொழிலதிபரிடம் பணத்தை கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த அங்குராஜ் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே நூல் கமிஷன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் வாட்ஸப் மூலமாக விஜயகார்த்திக் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார். தான் ஆந்திராவில் உள்ள ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் இயக்குனர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தனக்கு வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் உள்ளதாக கூறியுள்ளார்.

தனது நிறுவனத்தின் பெயரில் கோவை, திருப்பூர் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறுவதாகவும், சில நிர்வாக சிக்கல்களால் அவற்றிற்கு பணம் அனுப்ப தாமதம் ஆவதால், அந்த பணத்தை அங்குராஜ் கொடுத்தால் இரண்டு மடங்காக திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளில் மயங்கிய அங்குராஜ், தனது நண்பர் துரை என்கிற அம்மாசையுடன் இணைந்து தெரிந்தவர்களிடம் எல்லாம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ரூ.1.69 கோடி சேர்த்துள்ளனர்.


பின்னர் அதை அங்குராஜ் தனது கடையில் வைத்து விஜயகார்த்திக்கிற்கு வீடியோ கால் செய்து காட்டியுள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்களில் அங்கு வந்து நின்ற காரில் இருந்து வேகவேகமாக சிலர் இறங்கி வந்துள்ளனர். தாங்கள் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையில் இருந்து வருவதாகவும், இங்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாக தகவல் கிடைத்ததாகவும் சொல்லி சோதனை செய்து அந்த ரூ.1.69 கோடி பணத்தையும், அங்கிருந்து சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளையும் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.

பின்னர் ஹைதராபாத் தொழிலதிபர் விஜயகார்த்திக்கை தொடர்பு கொண்டபோது அவரும் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அங்குராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதுதான் வந்தவர்கள் போலி ஆசாமிகள் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார் தற்போது போலி அமலாக்கத்துறை அதிகாரிகளாக நடித்து பணத்தை கொள்ளையடித்த நாமக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். அபேஸ் செய்த பணத்தில் ஆடம்பர கார், செல்போன் என ஆசாமிகள் ஆடம்பரத்தில் குளித்துள்ளனர். அவர்களிடமிருந்த கார், செல்போன், கொள்ளையடித்த பணம் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

Edit by Prasanth.K