செய்தியாளர் மீதான தாக்குதல்: சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. சமீபத்தில் இவர் செய்தி வெளியிட்ட காரணத்திற்காக, நேசபிரபுவை நேற்று இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அவரை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களை நேசபிரபு செய்தியாக்கி வந்திருக்கிறார். அது தான் அவர் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்த பிறகும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம் ஆகும். நேசபிரபு மீது தாக்குதல் நடத்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.