1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (18:36 IST)

காரைக்குடி நண்டு மசாலா

நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் காரைக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.



தேவையான பொருட்கள்:

* நண்டு - 1 கிலோ
* புளிக்கரைசல் - 1 கப்
* பட்டை - 2
* பிரியாணி இலை -2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு:

* துருவிய தேங்காய் - 1 கப்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவற்றுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

* அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.

* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும், இப்போது சுவயான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.