வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By

நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை: மகிஷாசுரமர்த்தினி..!

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனின் ஆலோசனைபடி, சிவன் தேவர்களின் துன்பத்தைப் போக்க  எண்ணி, மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர். 
அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே  பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியைத் தேவர்களும்,  கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.
 
மகிஷாசுர மர்தினி: மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று  மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது.  வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது.

பூமித்தாய் அந்தப் பெண் சக்தியின்  பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது. மகிசனின் அசுரப் படைகளை தேவி லாவகமாக  முறியடித்து அசுரர்களைக் கொய்து, அழித்தாள். அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக்  கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.
 
நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை:
 
வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.