1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. With higher nutrients Amazing medicinal properties rich Manattakkali...!

அதிக சத்துக்களை கொண்ட மணத்தக்காளியின் மருத்துவ நன்மைகள்...!

மணத்தக்காளி
மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச் சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும்  ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதால், இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
 
கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும்   மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர்  கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். 
 
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். 
 
வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம்  ஆகும்.
 
மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத்  தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள்  உடனே வெளியேறும். இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும். 
 
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம்  கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். 
 
மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நல்ல  பலனைத் தரும்.
அடுத்த கட்டுரையில்
பயன் தரக்கூடிய சில இயற்கை மருத்துவ முறைகளும் பயன்களும்....!