புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது...?

நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் காலங்காலமாக மருந்து சாப்பிட்டு வந்தாலும் உறுதியான மனதுடன் சரியான உணவு முறைகளையும், உடற்பயிற்சிகளையும் கடைபிடித்தால் பாதிப்பிலிருந்து மீண்டு வரலாம். 

உணவு முறை: நீரிழிவு பாதிப்புள்ளோர் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி பட்டியலை கைக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு பொருள்களை சாப்பிட தவறுவதே இக்குறைபாட்டிற்கு முக்கிய காரணம். நார்ச்சத்து உடலில் குளூக்கோஸ் சேரும் வீதத்தை குறைக்கிறது. 
 
தினமும் பல்வேறு காய்கறிகள் மூலம் 30 கிராம் நார்ச்சத்து உடலில் சேர வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பேணவும், உடலுக்குத் தேவையான சக்தியினை பெறவும் புரோட்டீன் என்னும் புரதம் அடங்கிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். அதற்காக இறைச்சி மற்றும் முட்டைதான்  சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீரிழிவு பாதிப்பு வந்ததும் பலர் சைவ உணவு பழக்கத்திற்கு மாறிவிடுகின்றனர். 
 
தினை, கொண்டை கடலை, பட்டர் பீன்ஸ், தானியங்கள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகள் ஆகியவற்றை தாராளமாக சாப்பிடலாம்.  தினை வகைகள், பார்லி, தீட்டப்படாத முழு கோதுமை, சிவப்பரிசி ஆகியவற்றையும் சாப்பிடலாம். வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், பிரெக்கோலி, பாகற்காய்,  வெந்தயம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 
உணவு பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும். பழச்சாறு மட்டும் அருந்தி சாப்பிடாமல் இருத்தல், ஒருவேளை உணவை தவிர்த்தல் போன்றவை உடலிலுள்ள  நச்சுப்பொருள்கள் அகலவும், தங்கியிருக்கும் கொழுப்பு கரையவும் உதவும். உடற்பயிற்சி: உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைவு நீரிழிவு குறைபாட்டுக்கு  முக்கிய காரணம். நீந்துதல், 
 
ஜாகிங் என்னும் சீரான ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். மாடிப்படி ஏறுதல் மற்றும் யோகாசனம் செய்தல்  ஆகியவையும் நீரிழிவு பாதிப்பை குறைக்கும். மனஅழுத்தமும் நீரிழிவு பாதிப்பு காரணமாகலாம். ஆனால், அது நீரிழிவை மட்டும் கொண்டு வராது. வேறு பல உடல்  உபாதைகளுக்கும் காரணமாகலாம். 
 
மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற கவலைகளை தவிர்க்கவேண்டும். இயற்கை முறையில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு  அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை முறை வேண்டும். மிகவும் உறுதியுடன் சரியான உணவு முறைகளை கடைபிடிக்கவேண்டும். வாழ்க்கை முறை சரியாக அமைந்தால்  நீரிழிவிலிருந்து இயற்கை முறையிலேயே விடுபடலாம்.