வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் நீர்ச்சத்து நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்...?

ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.
போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். 
 
மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்”  என்றனர்.
 
காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.
 
தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச்  சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.
 
வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.
 
தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில்  84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.
 
பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.