செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது; வருவதற்கான காரணங்கள்...!

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின்  வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.
வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.
 
குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும்.  குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் அரிப்பு ஏற்படும். சிலருக்கு டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு போன்றவற்றால் அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.
 
இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.
 
சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு ஏற்படும்.
 
காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின்அடிப்பகுதி இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு  தொல்லை கொடுக்கும். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ,  குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
 
உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு,  தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக்  காரணமாக இருக்கலாம்.
 
நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். 
 
உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த  காரணங்களும் இருக்கின்றன.