1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

அறுபது வயதுக்கு மேற்பட்டவரானால் முதுமையால் ஏற்படும் கை நடுக்கமாக இது இருக்கலாம். அப்படியிருந்தால், அதற்கு பெரிதாகப் பயப்பட தேவையில்லை. ஒருவேளை பிரச்சினையாக இருந்தால், மருந்து கொடுத்து சரிப்படுத்தலாம்.

முதுமை அடைந்தவர்களுக்கு வரும் இன்னொரு தீவிர நடுக்கம் பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாதம். இது மிகத் தீவிரமான நடுக்கம். அத்துடன் நடை, சிந்தனை போன்றவற்றையும் இது மெதுவாக்கிவிடும். இதற்கு நரம்பியல் நிபுணரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். 
 
தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகளாலும் சில வகையான மருந்துகளாலும் கை நடுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ளது.
 
இளம் வயதில் கை நடுக்கம் ஏற்பட மனப் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம். கூடுதலாகப் படபடப்பு, தூக்கமின்மை போன்ற காரணங்களும் இருக்கும். மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் இதைச் சரியாக்கலாம். 
 
காப்பி, டீ போன்றவற்றை அதிகமாகக் குடித்தாலும், அதிகமாக மது குடித்தாலும் கை நடுக்கம் ஏற்படலாம். சிலருக்கு எந்த காரணமும் இன்றிக் கை நடுக்கம் ஏற்படலாம். இதையும் மருந்துகள் கொடுத்துக் கட்டுப்படுத்த முடியும்.