1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பொடுகு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

பொடுகு பிரச்சனை ஏற்பட, உடல் மற்றும் மனம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகுத் தொல்லை இருக்கும்போது, தலையில் செதில் செதிலாக தோல் படலம் ஏற்படுகிறது. 


நீண்ட நாள் பொடுகுப் பிரச்னையால், கண்கள், காதுகள், மூக்கு மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள சருமத்தையும் அது பாதிப்படையச் செய்யும்  வாய்ப்புகள் அதிகம்.
 
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, எண்ணெய்ப் பசை சுரக்கும் செபாசியஸ் சுரப்பியின் குறைபாட்டால் பொடுகு ஏற்படும். எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கு,  அதிகப்படியான சுரப்பு காரணமாக, பூஞ்சைத்தொற்று உருவாகி, பொடுகை ஏற்படுத்தும்.
 
தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக்கொள்வது, முறையாகப் பராமரிக்காதது. சிலருக்குத் தோல் ஒவ்வாமை பிரச்னை இருக்கும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதால், பொடுகு ஏற்படலாம்.
 
சில வகை உணவுகள் சருமப் பிரச்னைக்கு வழிவகுக்கும். துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் குறைந்த உணவுகள் உட்கொள்வது, எண்ணெயில் பொரித்த  உணவுகளை அதிகம் சாப்பிடுவது பொடுகுக்குக் காரணம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
தட்பவெப்பநிலை மாறுபாடு: குளிர் காலங்களில் வியர்வையே இன்றி இருப்பதும், கோடை காலத்தில் அதிகமாக வியர்ப்பதும் சிலரின் சருமத்தைப் பாதிக்கும். இந்த  தட்பவெப்ப நிலை மாறுபாடுகளாலும் சிலருக்கு பொடுகு ஏற்படலாம்.
 
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் தினசரி இரண்டு முறை குளிக்கலாம். பொடுகு என்பது ஒருவகையான தூய்மைக் குறைபாடுதான். நோய் அல்ல. இந்தப் பிரச்னையைக் கவனிக்காமல்விட்டால், சொரியாசிஸ் என்ற தோல்அழற்சி நோய் ஏற்படும்.