சர்க்கரை நோய்க்கு உணவு கட்டுப்பாடு அவசியமா....?
சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால் உண்மையில் உணவுக் கட்டுப்பாடு என்பதைவிட இதை உணவுமுறை மாற்றம் என்று கூறுவதே சரியானதாக இருக்கும். உணவுக் கட்டுப்பாடு என்று வயிற்றைப் பட்டினி போட்டு வருந்தவேண்டிய அவசியமில்லை.
பொதுவாக எல்லோரும் ஒரே விதமாகச் சாப்பிடுவது இல்லை. அவரவர் வேலைக்குத் தகுந்தாற் போல சக்தி தேவைப்படுகிறது. எனவே, செலவிடும் சக்திக்கு ஏற்றாற்போலத்தான் சாப்பிட வேண்டும்.
நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு குறைந்த அளவு உணவே போதுமானது. அவர் அதிக உணவு சாப்பிட்டால் கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து விடும் அபாயம் உண்டாகும். இதனால் சர்க்கரை நோய் தானாகவே வந்துவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தனியாக வீட்டில் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் தயார் செய்வதையே நீங்களும் அளவோடு பிறருடன் சேர்ந்தே உண்ணலாம். நார்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு, கொழுப்புச் சத்தின் அளவு இரண்டையும் குறைக்கச் செய்யலாம்.
கோதுமையும் ராகியும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அல்ல. அளவுடன் தான் உண்ண வேண்டும். ஏனெனில் அரிசி, கோதுமை, ராகி மூன்றுமே கிட்டதட்ட ஒரே சக்தியை தருபவை.
உணவு முறையை கடைப்பிடித்தால் மட்டுமே மாத்திரைகளும், இன்சுலின் ஊசியும் சர்க்கரையை குறைக்க உதவும். அதிக உணவு சாப்பிட்டு விட்டு அதிக மாத்திரை சாப்பிடுவது தவறு.
சைவ உணவே சர்க்கரை நோய்க்கு நல்லது. அசைவ உணவு உண்பவர்கள், அது கொடுக்கும் சக்தியைக் கணக்கிட்டு அளவாக உண்ணலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். உதாரணமாக: முட்டையில் உள்ள மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, ஈரல், மூளை, ஆட்டுக்கறி, இறால், நண்டு, முந்திரி, பாதாம்பருப்பு, நிலக்கடலை, ஆட்டுக்கால் சூப்.