திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கற்றாழையின் பயன்கள்...!!

கற்றாழை சிறந்த மருத்துவ மூலிகையாக நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கற்றாழையில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்களை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டதாகும்.
கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு சிரங்கு குணமாகும்.
 
சோற்றுக் கற்றாழையின் மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடிவிடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு அதை புண்களின் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
 
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி வீக்கம் மட்டுமல்லாமல் இரத்தக் கட்டும் மாறும்.
 
தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
 
கற்றாழை சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
 
மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம் அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவ தன்மையும் அதிகரிக்கிறது.
 
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி  நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்.
 
கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை  மேம்படுத்துகிறது.