செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அல்சர் பிரச்சனைகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்....!!

அல்சர் உள்ளவர்களுக்கு அவ்வப்போது விட்டுவிட்டு வயிறு, நெஞ்சு போன்ற பகுதிகளில் வலி ஏற்படுதல், சாப்பிட்ட உடனேயோ சற்று நேரம்  கழித்தோ வயிற்று வலி உண்டாதல், வாந்தி எடுத்தல், இரத்தத்துடன் மலம் கழிதல், பசியினால் சாப்பிட வேண்டும் என்றிருந்தாலும் சாப்பிட முடியாமல் இருத்தல், வாயில் அடிக்கடி துர்நாற்றம் வீசுதல், உடலின் எடை குறைந்து வருதல், வயிற்று எரிச்சல், வயிறு உப்பிசம், புளிப்பு  ஏப்பம் வருதல் என்பன ஆகும்.
இரைப்பையில் வருவது ‘கேஸ்டிரிக் அல்சர்’ என்றும் இரைப்பை கோளத்தில் வருவது ‘பெப்டிக் அல்சர்’ அல்லது ‘டியோடினல் அல்சர்’  என்றும் சொல்லப்படுகிறது.
 
கேஸ்ட்ரிக் அல்சர் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்டால் வயிற்றுவலி அதிகமாகும். வாந்தி எடுத்தால் தான் வலி குறையும். பசி இருக்கும்  ஆனால் சாப்பிட பயந்து சாப்பிடாமல் இருந்து நாளடைவில் எடை குறைந்துகொண்டே போகும். உடல் மெலியும்.
 
இரைப்பை கோளத்திலுள்ள அல்சருக்கு உணவு சாப்பிட்டால்தான் வயிற்றுவலி குறையும். வயிறு காலியாக இருந்தால் வலி அதிகமாகும். பசி  இருக்கும் அதனால் அதிகமாக சாப்பிட உடல் எடை அதிகரிக்கும்.
இரைப்பை உட்சுவர்களை வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாக தாக்காமல் இருக்க, வாயில் சுரக்கும் உமிழ்நீர் உதவியாக இருந்து அமிலத்தின் அரிப்புத் தன்மையை குறைக்கிறது.
 
அல்சர் நோய்லிருந்து விடுபடுவதற்கு, பசி எடுக்கும் நேரத்தில் காலம் தவறாமல் ஏதாவது பழங்கள் அல்லது பழச்சாறுகள் உட்கொண்டு பசியை  தணிக்க வேண்டும்.
 
உணவில் உப்பு, புளி, காரம் பாதியாக குறைப்பது முக்கியமானது. போதைபொருள், மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே விட்டுவிட  வேண்டும்.
 
உணவு உண்ணும்போது பற்களால் நன்கு மென்று அரைத்து உமிழ்நீர் கலக்கும்படி செய்து விழுங்க வேண்டும். ஒரு கப் தண்ணீர்  குடித்தாலும்கூட கொஞ்சம் கொஞ்சமாக நாவால் நன்கு கலக்கி உமிழ்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மிலி அளவுக்கு வெண்பூசணிச் சாறினை அருந்திவர வேண்டும். சிலருக்கு இச்சாறு பிடிக்காது. சளி ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்கள் சாறாக சாப்பிடாமல் பொரியல், குழம்பு என சமைத்து சாப்பிடலாம்.
 
அல்சர் நோயாளிகள் உணவில் பால் சாதம், தயிர் சாதம், மோர்சாதம், இளநீர், புடலங்காய், காரட், முட்டைகோஸ், வாழைப்பழம், மணத்தக்காளிப்பழம், மணத்தக்காளி கீரை, கீரைவகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பொதுவாக துவர்ப்பு சுவையுள்ள நாவல்பழம், சப்போட்டா பழம், மாதுளம் பழம், சுண்டைக்காய், அத்திப்பழம் ஆகியவற்றை அல்சர் நோயாளிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.