செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எண்ணெய் மசாஜ் குளியல்...!

முன்பெல்லாம் எண்ணெய் குளியல் என்பது மக்களின் அவசியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.
உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும். சருமம் அழகு பெறும். ரத்த ஓட்டம் சீரடையும். ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
 
உடல் சூடு அதிகமாவதன் விளைவாக சருமத்தில் பருக்கள், கட்டிகள், கொப்புளங்கள் கிளம்பும். ஸ்ட்ரெஸ் அதிகமிருக்கும் போது, அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீவிரமடையும். இதனால் வாரம் தவறாமல் மசாஜ் செய்துகொள்கிறவர்களுக்கு முதுமைத் தோற்றம் தள்ளிப் போய், இளமை நீடிக்கும். 
 
எண்ணெய் குளியல் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஜலதோஷம் பிடிக்குமோ என்கிற பயம். இவர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு தலையை நன்கு காய வைத்து, ராஸ்னாதி சூரணத்தில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு சிட்டிகையை எடுத்து, உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து விட்டால் போதும். மண்டைக்குள் இருக்கும் நீரையெல்லாம் அது எடுத்து விடும். சளி பிடிக்காது.
 
முதல் முறை இந்த எண்ணெய் குளியல் எடுப்பவர்கள் எண்ணெய் தேய்த்த உடனேயே குளித்து விடலாம். நல்லெண்ணெயில் நான்கைந்து மிளகு போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சி, தலையில் தடவிக் குளிக்கலாம். 
 
மாதவிலக்கு சுழற்சி முறையின்றி இருப்பவர்களும், ஹார்மோன் பிரச்னைகள் உள்ளவர்களும் முறையான ஆலோசனை பெறாமல் ஆயில் மசாஜ் செய்யக்  கூடாது.
 
எண்ணெய் மசாஜ் செய்யும்போது ஆக்ரோஷமாக அடித்தோ செய்யக் கூடாது. மிகவும் மென்மையாக, அதிக அழுத்தம் கொடுக்காமல், தாங்கும் சக்திக்கேற்ப மசாஜ் செய்ய வேண்டும். எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே மசாஜ் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் மசாஜ் செய்யக் கூடாது. வழிகிற அளவுக்கு எண்ணெய் வைப்பதை விட, அளவாக உபயோகிப்பதுதான் சரியானது. 
 
கர்ப்பிணிகள் முதல் 3 மற்றும் இறுதி3 மாதங்களில் மசாஜ் செய்து கொள்ளக்கூடாது. இடைப்பட்ட மாதங்களில் மருத்துவரின் ஆலோசனை மற்றும்  மேற்பார்வையின் பேரில் மிதமான மசாஜ் செய்து கொள்ளலாம்.
 
எண்ணெய் குளியலுக்கு உச்சி வெயிலுக்கு முன்பான நேரம் மிகவும் உகந்தது. வாரம் ஒரு முறையோ, இரு முறையோ எண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் எடுப்பது ஆரோக்கியம் காக்க உதவும். பிரசவத்துக்குப் பிறகு மசாஜ் செய்து கொள்வதன் மூலம் தளர்ந்து போன தசைகளை இறுகச் செய்ய முடியும்.
 
எண்ணெய் குளியல் ஒருவரின் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபத்தின் அளவுகளை அறிந்து, அதற்கேற்ற எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். முறையாக செய்யப்படுகிற மசாஜ் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதைப் போலவே, முறையற்று,  தவறாகச் செய்கிற மசாஜ் எதிர்மறையான பலன்களைத் தரும்.