வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் பலன்களும்...!

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.
பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது  கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.
 
மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல  இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
 
பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும்  ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.
 
பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு  உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை  உற்பத்தி செய்கிறது.
பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச்  செய்யும்.
 
பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பு கொண்ட  சிற்றுண்டிகளை மிக எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு,  தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது.