வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவப் பயன்கள்...!

தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி”  என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் கள் மற்றும் பதணி உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த  சுவை உடையது. புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும்  சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
 
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அற்புத மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட  கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
 
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் இருந்தால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
 
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
 
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும்  பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில  மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
 
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சல் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை  தருகிறது.