புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள்...!!

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டி வர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு மருந்தாக அமையும். நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்ட வெற்றிலை, புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டும் வெற்றிலை, உடலில் வெப்பத்தை தருவதோடு தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
 
வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆடும் பற்களை கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை  பலப்படுத்துகிறது.
 
நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
 
வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
 
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்தினால் உடனடியாக மலம் கழியும்.
 
வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச் சுரக்கும். ஈரத்தால் வரும் தலைவலிக்கு வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்தால், வலி நீங்கும்.
 
துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை காலை மாலை என இரு வேலைகள் குடித்து வர, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.