நீராவி பிடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?
நீராவி பிடித்தல் பல நன்மைகளை தரும். ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கைவைத்தியமுறை ஆவி பிடித்தல் ஆகும்.
சூடான தண்ணீரில் சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும். நல்ல சூடான ஆவியை சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.
மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி, கற்பூரவள்ளி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது.
இந்த ஆவி பிடித்தல் வைத்தியம் மூலம் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும். நுரையீரலுக்கு நீராவி பிடித்தல் நல்ல நிவாரணம் தரும்.
கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்து, போர்வையால் மூடிக்கொண்டு, ஆவியை சுவாசித்தால் போதும். கட்டாயம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
சுத்தமான நீரில் வேப்பிலை, துளசி, நொச்சி இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தொல்லைப்படுத்தும் சளி, இருமலை விரட்ட, ஆவி பிடித்தால் சுவாசம் தடையின்றி இருக்கும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுவோர் இம்முறையை பின்பற்றலாம்.
நீரில் எலுமிச்சை அல்லது மஞ்சள் பொடியை கலந்து ஆவி பிடித்தால் தலை பாரம் நீங்கும். அதிகம் சாப்பிட்டவர்கள், மயக்கம், தலைச்சுற்று உள்ளவர்கள், மது அருந்தியவர்கள், கண் நோய் உள்ளவர்கள், கண்ணில் அழுத்தம் இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, மலபந்தம், பசி, தாகத்தோடு இருப்பவர்கள், கோபமுள்ளவர்கள், மாதவிடாய் பெண்கள், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் ஆவி பிடிப்பதை தவிர்க்கவேண்டும்.