செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் தேவையற்ற வேதிப் பொருட்கள் கலந்திருக்கின்றன. இவை வயிற்றை அடைந்து பல கெடுதல்களை  உருவாக்குகின்றன. 


குறிப்பாக, உணவு உண்ட சில மணி நேரங்களில் இரைப்பையில் இருக்கும் அமிலத்தில் நிகழும் வினைகளால் வாயு உருவாகிறது. இவை பல நேரங்களில் உணவுக்குழாய் வழியாக மேலேறி வெளியேறாமல் இருந்துவிடும்.
 
நாள் முழுக்க வாயுத் தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். இதனால், இவர்களது வயிறு பானை போலப் பெரிதாக இருக்கும். இதனைச் சரிசெய்ய, நீரில் சீரகத்தை இட்டுக் கொதிக்க வைத்த நீரை குடித்தால் இந்த தொல்லை முழுதாக நீங்கும்.
 
சமையலில் சைவ, அசைவ உணவுகளை சமைக்கும்போது எண்ணெய்யில் சீரகத்தைப் பொறிப்பது வழக்கம். உணவில் சுவையைக் கூட்ட மட்டுமல்ல, வயிற்றில் வாயுத் தொந்தரவைக் குறைப்பதற்கும் இது பயன்படுகிறது. மேலும் இவை செரிமானப் பிரச்சனைகளுக்கு எளிதாகத்  தீர்வை அளிக்கக்கூடியது.
 
குழந்தைகள் சாப்பிடாமல் அடம்பிடிக்க முக்கியமான காரணம் பசியின்மை. காலநிலை, உடல் வெப்பம், மலம் கழிக்காமல் இருத்தல் உட்படப் பல காரணங்கள் இதன் பின்னிருக்கின்றன. இதனைச் சரிப்படுத்த சீரக நீரை குடித்தால் உடலுக்கு நல்லது.
 
காலை உணவுக்குப் பிறகு பகல் 11 மணியளவில் இந்த நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். அடுத்த 2 மணி நேரத்தில் மதிய  சாப்பாடு எங்கே என்று கேட்பார்கள். பாரம்பரிய உணவு முறைகளின் அவசியம் மட்டுமல்ல, நவீன உணவுகளால் ஏற்படும் கெடுதல்களும் கூட  இதனால் நீங்குகின்றன. 
 
சாக்லேட், செயற்கை இனிப்புகள், அதீத காரமான உணவுகள், துரித உணவகங்களில் தயார் செய்யப்படுபவை போன்றவற்றால் குழந்தைகள் அதிக அளவில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதனைத் தீர்க்க சீரகம் உதவுகிறது.
 
பல்வலி, சொத்தைப்பல், வாய்ப்புண் போன்ற தொந்தரவுகளுக்கும் சீரக நீர் அருமையான மருந்து. இதனைக் கொப்பளிப்பதன் மூலமாக வாயில் உள்ள கிருமிகள் அழியும்; வலி தானாக மறையும்.