வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சோற்று கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவதால் பலன்கள்...?

சோற்றுக் கற்றாழையின் மேல் உள்ள தோலை நீக்கி அரிசி கழுவிய நீரில் 7 அல்லது 8 முறை அலசி அந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வெறுமன அப்படியே பயன்படுத்தக் கூடாது. 

கற்றாழை ஜெல்லை மத்து வைத்து கடைந்து பணங்கற்கண்டு சேர்த்து கூழ் போல் செய்து, வெயில் காலங்களில் பருகலாம். உடல் குளிர்ச்சி பெறும். 
 
அலசி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றாழையுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம்,நெய்யுடன் சேர்த்து உண்டுவர, நாள்பட்ட வறட்டு இருமல் தீர்ந்துவிடும்.  சோற்றுக் கற்றாழை சதைகளை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் பெண்கள் சாப்பிட்டு வர, மாத விலக்கு இன்னல்கள் தீரும்.
 
கற்றாழை ஜெல், தயிர், சீரகம் சேர்த்து கடைந்தும் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். கற்றாழையை வெறும் வயிற்றில் உண்பதே சிறந்தது. மழை காலங்களில் கற்றாழை ஜெல்லை கடைந்து அல்லது சாறு எடுத்து வெந்நீருடன் கலந்து வெறும் வயிற்றில் அருந்தலாம். மிகுந்த நன்மையை அளிக்கும். 
 
நன்கு அலசி சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சதைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கடுக்காய்ப் பொடி சிறிதளவு இட, சோற்றுக் கற்றாழை சதையிலிருந்து  நீர் தனியே விலகும், அதை சேகரித்து அத்துடன் ஏழெட்டு துளிகள் எலுமிச்சை சாறு இட்டு, தினமும் காலைவேளையில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இதன்மூலம், உடலில் அதிகமுள்ள வாயு (வாதம்), பித்தம் (சூடு), மற்றும் நீர் (கபம்) நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதை உணரலாம். இதை மூன்று நாட்கள்  சாப்பிடுவது நல்ல பலன் தரும்.