உடல் எடையை பராமரிக்க உதவும் அற்புத நிவாரணங்கள் !!
உடல் எடை அதிகமாக இருந்தால் பல்வேறு நோய்கள் வரும் என்பது தெரிந்தாலும், பரம்பரை காரணமாகவும், மாறிய வாழ்க்கை முறைகளாலும் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை பெரும்பாலான மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க, தேநீர், காபி போன்ற பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை கலந்த நீரை அருந்தலாம். ஆனால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும், சர்க்கரை அல்லது உப்பு இரண்டில் அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் ஒன்றை தவிர்க்கவும்.
எலுமிச்சை சாறு அருந்திய இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை சாப்பிடலாம். இரண்டு முட்டைகள், வேக வைத்த காய்கறிகள் மற்றும் எண்ணெய் சேர்க்காத தானியத்தை எடுத்துக் கொள்ளவும். காலை உணவுக்கு 3 மணி நேரத்திற்கு பிறகு ஏதாவது ஒரு பானத்தை அருந்தலாம். எலுமிச்சை சாறு, இளநீர் அல்லது க்ரீன் டீ என ஏதாவது ஒரு பானத்தை அருந்தவும்.
உடல் பருமனை குறைக்க மதிய உணவு மிகவும் முக்கையமானது. கீரை மற்றும் காய்கறிகளை அதிகமாகவும், அரிசி, கோதுமை, தானியங்களை குறைந்த அளவும் சேர்த்துக் கொள்ளவும். மதிய உணவில் ஏதாவது ஒரு பருப்பு இருப்பது அவசியம்.
மாலையில் பசித்தால், க்ரீன் டீயுடன் அவல் பொரி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளவும். நொறுக்குத் தீனியை தவிக்கவும்.
இரவு உணவில் காய்கறிகள் மற்றும் பருப்பு கலந்த கூட்டு மற்றும் அரிசி அல்லது கோதுமையால் செய்யப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பது நல்லது.