1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (12:24 IST)

ஹிஜாப் சர்ச்சை குறித்து உலக நாடுகள் கருத்து! – இந்தியா பதிலடி!

கர்நாடகா ஹிஜாப் விவகாரம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேசி வருவதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை எதிர்த்து மாணவர்கள் மற்றும் சிலர் காவித்துண்டு அணிந்து போராட்டம் செய்வது போன்ற நிகழ்வுகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஹிஜாப் விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து ஐஆர்எஃப்-ன் அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியான ஆடைகளை தேர்ந்தெடுக்க்கொள்ளும் உரிமைகளை சேர்த்ததே. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா, அணியக்கூடாதா என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் மத சுதந்திரத்தை களங்கப்படுத்துவது போன்றது” எனக் கூறியிருந்தார். மேலும் சில நாடுகளும் இந்த விவகாரம் குறித்து பேசி வந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளிநாடுகள் பேசி வருவது குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள மத்திய அரசு “கர்நாடாகாவின் சில கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் சீருடை சம்பந்தமான பிரச்சினை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துகள் எப்போதும் ஏற்கப்படாது” என்று தெரிவித்துள்ளது.