குடியுரிமை மசோதாவை எதிர்த்து வாக்களித்ததா திமுக?
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், திமுக கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக ஆவேசமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த ஆவேசத்தை இந்த கட்சியின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் உள்ளே தெரிவித்தார்களா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது
குடியுரிமை திருத்த சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்தபோது இந்த மசோதாவை எதிர்த்து வெறும் 80 எம்பிக்கள் மட்டுமே வாக்களித்தனர். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்பிக்கள் உள்ளனர். அதேபோல் திமுகவுக்கு 24 எம்பிக்கள் உள்ளனர். இந்த இரு கட்சிகளுக்கு மட்டுமே 76 பேர் உள்ள நிலையில் மொத்த எதிர்ப்பு வாக்குகளே 80 மட்டும் கிடைத்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் 22 எம்பிக்களும், பிஜு ஜனதா தளத்தின் 12 எம்பிக்களும் திரிணாமல் கட்சியின் 22 எம்பிக்களும், மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட மற்ற கட்சிகளின் எம்பிக்களும் மசோதாவை எதிர்த்து ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வெளியே இந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் இந்த கட்சிகளின் எம்பிக்கள் வாக்கெடுப்பின்போது கேண்டீனுக்கு சென்றுவிட்டார்களா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.