கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒரு நல்ல திட்டம்! – இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
இந்தியாவில் கொரோனா பரவலை அறியவும் கட்டுப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்ய சேது செயலி குறித்து உலக சுகாதார நிறுவனம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் மக்கள் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை அறியவும், தங்களது கொரொனா பாதிப்பு விவரங்களை பதிவு செய்யவும் ஆரோக்ய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் வெளியே நடமாட தொடங்கியுள்ள நிலையில் ஆரோக்ய சேது செயலியின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 150 மில்லியன் மக்களால் ஆரோக்ய சேது செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இந்தியாவின் இந்த முயற்சி கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்துள்ளார்.