போதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி.. நடுவானில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
துபாயிலிருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் பெண் விமான ஊழியரிடம் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பயணம் நடந்துகொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த அந்த பயணி, ஒரு விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரிகிறது. ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், விமான ஊழியர்கள் சிறிதும் தாமதிக்காமல் விமான நிலைய பாதுகாப்பு காவலர்களிடம் இந்த விவகாரத்தை தெரிவித்தனர். சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டதுடன், விமான நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பயணியின் அடையாளம் அல்லது அவர் அத்துமீறியதன் முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, விமான நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களை மிக தீவிரமாக எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். DGCA விதிமுறைகளின்படி, விமான நிறுவனங்கள் இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைத்து, தேவைப்பட்டால் அந்த பயணியை இந்தியா முழுவதும் விமானத்தில் பறக்க தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva