முதல் பயணத்திலேயே பழுதாகி பாதி வழியில் நின்ற வந்தே பாரத் ரயில்!
இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமை பெற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். டெல்லியி இருந்து வாரணாசி செல்லும் இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வந்தே பாரத் ரயில் பயணிகளுடன் தனது முதல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியது. ஆனால் இந்த ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென பாதியில் பழுதாகி நின்றது. அதிநவீன வசதி கொண்ட வந்தே பாரத், முதல் பயணத்திலேயே பழுதானதால் அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
டெல்லியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் வந்தே பாரத் ரயில் பழுதாகி நிற்கும் செய்தி அறிந்த ரயில்வே துறை உடனடியாக ரயிலின் பழுதை சரிபார்க்க தொழில்நுட்ப நபர்களை அனுப்பி வைத்தது. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று ரயில்களில் வாரணாசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிவேகமாக சென்றதால் ரயில் கட்டுப்பாட்டு இழந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போதைக்கு சீரமைக்க முடியாததாக உள்ளதாகவும் ரயிலை சோதனை செய்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது